மலரின் மௌனம்( பாகம் 6)
காலம் கரைந்து ஓடியது…
வறுமையின் வாசலில் தொடங்கிய அந்தக் குடும்ப வாழ்க்கை, மெதுவாக ஒவ்வொருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்துச் சென்றது.
வீட்டின் நான்கு ஆண் பிள்ளைகளும் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்று குடும்பச் சுமையைத் தாங்கினர்.
அவர்களின் உழைப்பில் தம்பிமார் இருவரும் பள்ளிக்குச் சென்றார்கள்.
ஆனால் கைப்பிள்ளைக்கு மட்டும் படிப்பு என்றாலே பிடிக்கவில்லை.
எழுத்துக்கள் அவன் மனதில் பதியவே இல்லை.
அதனால் ஒரு கட்டத்தில் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டான்.
அந்தக் காலத்தில் பீபிக்கும் கல்வியின் முக்கியத்துவம் முழுமையாகப் புரியவில்லை.
“வாழ்க்கை ஓடினால் போதும்…” என்ற எண்ணமே அவளின் மனதில் இருந்தது.
காலம் மெதுவாக ரசாக்கையும் வாலிபப் பருவத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.
பீபியின் வீட்டில் எல்லோரையும் விட அழகாகத் தோன்றியது ரசாக்தான்.
அழகு மட்டுமல்ல…
அவனிடம் ஒரு தனி ஸ்டைல் இருந்தது.
ரசாக் நடந்து வந்தாலே தெருவே திரும்பிப் பார்க்கும்.
சுருட்டையான தலைமுடி…
அழகாக அணிந்த சேட்…
இரு கைகளும் முழங்கை வரை நேர்த்தியாக மடிக்கப்பட்டிருக்கும்.
சேட்டின் பொக்கட்டிலிருந்து சற்று வெளியே தெரியும் தாள் காசுகள் கூட அவனுடைய ஸ்டைலின் ஒரு பகுதியாகவே தோன்றும்.
அவன் கட்டிய சாரம் பாதையைத் தேய்த்துக் கொண்டு பின்னால் ஆடும்.
நகைச்சுவை பேசுவதில் ரசாக்கை மிஞ்ச யாரும் இல்லை.
கேலி, கிண்டல், சிரிப்பு — அவன் இருந்த இடத்தில் சோகம் தங்காது.
ஊரிலுள்ள வாலிபர்கள் கூட்டமாக நின்று “கணீர்” என சிரித்துக் கொண்டிருந்தால்,
அந்தக் கூட்டத்தில் ரசாக் கண்டிப்பாக இருப்பான்.
வறுமை அவன் தோளில் இருந்தாலும்,
மகிழ்ச்சி அவன் முகத்தை விட்டு அகலவில்லை.
இவ்வாறு வாழ்க்கையின் இனிமையான வாலிபப் பருவத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசாக்கின் இதயத்தில்,
ஒரு நாள் மெதுவாக காதலும் கதவைத் தட்டத் தொடங்கியது…
மலரின் மௌனம் தொடரும்..

கருத்துகள்
கருத்துரையிடுக