மலரின் மௌனம் (பாகம் - 4)
யார் இந்த ரசாக்?
ரசாக் இற்கு என்ன தான் நடந்தது?
ஆம்… பீபியின் எட்டு பிள்ளைகளில் ஆறாவது மகன் தான் இந்த ரசாக்.
இவனுக்கு இரண்டு அக்காமாரும், மூன்று அண்ணன்மாரும், இரண்டு தம்பிமாரும் இருந்தார்கள்.
பீபிக்கு தனது எட்டாவது கடைசி மகன் பிறந்து எட்டு மாதங்களே ஆயிருந்தது. அந்த நேரத்திலேயே அவள் தனது கணவனை இழந்துவிட்டாள்.
“மாரடைப்பு…”
அந்த ஒரு வார்த்தை, ஒரு குடும்பத்தின் நிம்மதியை முழுவதுமாக சிதறடித்துவிட்டது.
அன்றிலிருந்து பீபியின் வாழ்க்கை மாறிப்போனது.
ஒரு பெண்ணாக அல்ல…
ஒரு தாயாக மட்டுமே அவள் வாழத் தொடங்கினாள்.
எட்டு பிள்ளைகளையும் வளர்த்து கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு, தனியாக அவளின் தோள்களில் விழுந்தது.
காலை விடியும் முன் எழுந்து வேலைக்கு செல்வாள்.
என்ன வேலை தெரியுமா?
அந்த காலத்தில் “கெபலை வெட்டுவது” என்பார்கள்.
வீடுகள் கட்டப்படும் இடங்களில் மண்வெட்டுவது…
அந்த மண்ணை பெரிய கூளங்களில் நிரப்பி, தலையில் சுமந்து தொலைதூரம் கொண்டு சென்று கொட்டுவது…
ஒரு பெண்ணாக அல்ல…
ஒரு இரும்பு பெண்ணாகவே பீபி வாழ்ந்தாள்.
வெயிலும் மழையும் பாராமல் உடலை உடைத்து உழைப்பாள்.
அன்றைய தினம் கிடைக்கும் சிறிய சம்பளத்திலேயே அந்த எட்டு பிள்ளைகளின் பசியை அடக்க வேண்டும்.
சில நாட்களில் சாப்பாடு இருந்தது…
சில நாட்களில் வெறும் தண்ணீரே வயிற்றை நிரப்பியது…
ஆனால்,
பிள்ளைகள் முன்னால் மட்டும் பீபி ஒருபோதும் அழவில்லை.
“நான் இருக்கிறேன்…”
என்று சொல்லிக்கொண்டே, தனது கண்ணீரை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டாள்.
வேலைக்கு செல்லும் போது, தனது கடைசி எட்டு மாத குழந்தையை பீபியின் மூத்த மகள் ராணி பார்த்துக் கொள்ளுவாள்.
கடைசி பிள்ளை என்பதால், அந்தச் சிறு குழந்தைக்கு “கைப்புள்ள” என்ற பெயரே ஒட்டிக்கொண்டது.
கைப்புள்ள பசியால் அழும் போதெல்லாம்,
ராணி அவனைத் தூக்கிக்கொண்டு தாலாட்டு பாடுவாள்.
பிறகு வீட்டில் இருக்கும் தேயிலை பிளேன் டீயை கொஞ்சம் ஆற்றி, மெதுவாக பருக்குவாள்.
அந்த டீயே சில நேரங்களில் அந்த குழந்தையின் பசியை அடக்கிய உணவாக மாறிவிடும்.
பீபிக்கு தினமும் வேலை கிடைக்காது.
வேலை இல்லாத நாட்களில், அவளும் அவளைப் போன்ற இன்னும் சில சிங்கப்பெண்களும் சேர்ந்து காட்டுப்பக்கம் சென்று விடுவார்கள்.
சில நேரங்களில் தேயிலை மலைக்குச் செல்வார்கள்.
விறகுப் பொறுக்கி, அதை கட்டுகளாக கட்டி, வசதியான வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பார்கள்.
அந்த நாளில் கிடைக்கும் சில ரூபாய்தான்…
அந்த குடும்பத்தின் அன்றைய பசியை தள்ளிப்போடும்.
வறுமை அந்த வீட்டில் நிரந்தரமாக குடியேறியிருந்தாலும்,
அன்பு மட்டும் ஒருபோதும் குறையவில்லை.
அந்த அன்பின் நடுவில் தான் ரசாக் வளர்ந்தான்.
பசியை பார்த்தவன்.
கண்ணீரை மறைத்த சிரிப்பை பார்த்தவன்.
தாயின் உடைந்த கைகளில் குடும்பம் எப்படி நின்றது என்பதைக் கண்ணால் கண்டவன்.
அதனால் தான்,
மலரின் மௌனம் தொடரும்...
(இன்ஷா அல்லாஹ்)

கருத்துகள்
கருத்துரையிடுக