மலரின் மௌனம் ( பாகம் -2)

 

மீண்டும் மீண்டும் வீட்டின் உள்ளிருந்து பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டின் நினைவுகளை சுமந்தபடி வாசலை கடந்து சென்றது.


அந்த நேரத்தில்…

பல ஆண்டுகளாக அந்த வீட்டின் சுவரில் பெருமையாக தொங்கியிருந்த பழைமையான பெரிய கடிகாரத்தை இருவர் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

மரத்தால் செய்யப்பட்ட அந்த கடிகாரம், காலத்தின் சாட்சியாக இருந்தது.

அதன் உள்ளே கீழே தொங்கியிருந்த வெள்ளி நிற மணி மெதுவாக ஆடிக்கொண்டே இருந்தது.


ஒரு மணி அடித்தால் —

“டாங்…”


இரண்டு மணி அடித்தால் —

“டாங்… டாங்…”


பன்னிரண்டு மணி என்றால் —

அந்த வீடு முழுவதும் அதிரும் அளவுக்கு

“டாங்… டாங்… டாங்…”

என்று ஒலித்துக் கொண்டே இருக்கும்.


அந்த சத்தம்…

ஒரு காலத்தில் அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் சில நேரங்களில் அதே சத்தம், காரணமில்லாத ஒரு பயத்தையும் அவளுள் எழுப்பி விடும்.


இப்போது அந்த கடிகாரத்தையும் லொரியில் ஏற்றப் போகிறார்கள்.


அதை பார்த்தவுடன் பாத்திமா திடீரென ஓடிப்போனாள்.

அந்த பெரிய கடிகாரத்தை இரு கைகளாலும் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“இதை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள்…” என்று சொல்ல முடியாமல் கதறினாள்.


அவளது கண்ணீர் துளிகள் கடிகாரத்தின் பழைய மரத்தின்மேல் விழுந்து வழிந்தன.

பல வருடங்களாக நேரத்தை காட்டிய அந்த கடிகாரம்,

இன்று அவளது கண்ணீரை அமைதியாக ஏற்றுக் கொண்டது போல இருந்தது.


அந்த மணிச் சத்தம்…

இப்போதும் அவளது காதுகளுக்குள் தெளிவாக ஒலித்தது.


“டாங்…”


அந்த ஒரு ஒலி மட்டும் போதும்…

அவளது மனதை கிழித்து, கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளுக்குள் அவளை இழுத்துச் செல்ல.


அவள் கண்களை மூடினாள்.

மனதுக்குள் அந்த கடிகார மணி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது…


“டாங்…

டாங்…

டாங்…”


அந்த ஒலியோடு சேர்ந்து, மறந்து விட்டதாக நினைத்த நினைவுகளும் மெதுவாக உயிர்ப்பெடுக்கத் தொடங்கின…


அந்த இரவு…

மழை பெய்துகொண்டிருந்தது.

வீட்டின் வெளியே காற்று கதவுகளை பலமாக அடித்துக் கொண்டிருந்தது.

அனைவரும் வீட்டில் யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள் அந்த நள்ளிரவில்.  அவள் மட்டும் ஆழ்ந்த நீத்திரையில், அவளோடு சேர்ந்து அவளது தம்பியும் நித்திரையில்.அந்த பெரிய கடிகாரம் விழித்திருந்தது போல மணி அடித்துக் கொண்டே இருந்தது…


“டாங்… டாங்… டாங்…”


அந்த சத்தத்தோடு சேர்ந்து கேட்ட அந்த அலறல்…

இன்றுவரை பாத்திமாவின் இதயத்தில் இருந்து அழியாமல் இருந்தது…

      மலரின் மௌனம் தொடரும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்