மலரின் மௌனம் (பாகம்-5)
ரசாக்கும் அவனது அண்ணன்மார்களும் சிறுவயது முதலே உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
வயதில் சிறுவர்களாக இருந்தாலும், வாழ்க்கை அவர்களை பெரிய மனிதர்களாக மாற்றிவிட்டது.
ஒருவன் கடையில் சுமை தூக்கும் வேலை…
மற்றொருவன் ஹோட்டலில் வேலை…
இன்னொருவன் தையல் வேலை…
ரசாக்கோ மரக்கறித் தோட்டத்தில் வேலை…
இப்படி ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பை செய்து வீட்டை தாங்கத் தொடங்கினர்.
அதனால் இப்போது பீபி வேலைக்கு செல்லவில்லை.
வயதும் உடல் வலியும் அவளை மெதுவாக சோர்வடையச் செய்திருந்தது.
பீபி வாழ்ந்தது அவர்களுக்கே சொந்தமான ஒரு சிறிய வீட்டில்.
இரண்டு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட அந்த வீடு…
சமையல் அறை அழகாக வரிச்சு கொண்டு செய்யப்பட்ட மண்சுவர்…
எளிமையான அந்த வீட்டை பீபியின் கணவனுக்கு நகரசபையால் ஒப்புதலுடன் வழங்கியிருந்தார்கள்.
சிறிய வீடு தான்…
ஆனால் அந்த குடும்பத்தின் நினைவுகள் முழுவதும் அந்த சுவர்களுக்குள் தான் உயிரோடு இருந்தன.
கணவனின் சிரிப்பு…
பிள்ளைகளின் குழந்தைப் பருவம்…
பசியோடு கூட சேர்ந்த சிரிப்புகள்…
மழை பெய்யும் இரவுகளில் எல்லோரும் ஒன்றாக சுருண்டு படுத்த உறங்கிய தருணங்கள்…
அனைத்தும் அந்த வீட்டோடு கலந்திருந்தது.
மண் வாசனை வீசும் அந்த வீடு,
வறுமையிலிருந்தாலும் மனநிம்மதியை கொடுத்தது.
ஆனால்…
வறுமை ஒருவரை பலவீனப்படுத்தும் போது, உலகம் அவர்களை இன்னும் அழுத்தத் தொடங்கிவிடும்.
அந்த வீட்டைக்கூட சில வியாபாரிகள் விலை பேசத் தொடங்கிவிட்டனர்.
“இந்த வீட்டை விற்றுட்டா நல்ல பணம் கிடைக்கும்…”
“உங்களுக்கு இவ்வளவு பெரிய வீடு எதுக்கு…?”
“இதை விட்டுட்டு வேற எங்காவது போயிருக்கலாம்…”
என்று வார்த்தைகளால் சுற்றிவளைக்க முயன்றார்கள்.
பீபி அமைதியாக எல்லாம் கேட்பாள்.
ஆனால் உள்ளுக்குள் அவள் மனம் நடுங்கும்.
“உணவு இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை…
ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம்…
ஆனால் வீடில்லாமல் போனால்…
இந்த பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நான் எங்கே செல்வேன்…?”
என்று தனக்குள் சொல்லிக்கொள்வாள்.
இரவு நேரங்களில் அனைவரும் தூங்கிய பிறகு,
வீட்டின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து சுவரை பார்த்துக்கொண்டிருப்பாள் பீபி.
சில நேரங்களில் அந்த மண்சுவரை கை கொண்டு தடவிப்பார்ப்பாள்.
அவளின் கண்களில் மெதுவாக கண்ணீர் வழியும்.
“எந்த கஷ்டம் வந்தாலும்…
இந்த வீட்டை மட்டும் நான் விற்க மாட்டேன்…”
என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொண்டு மெதுவாக அழுதுகொள்வாள்.
அந்த வீடு…
அவளுக்கு ஒரு கட்டிடம் அல்ல…
அவள் கணவனின் கடைசி நினைவு…
அவள் பிள்ளைகளின் ஒரே பாதுகாப்பு…
அவளின் உயிரோடு கலந்த நம்பிக்கை…
அதனால் தான்…
வறுமை வயிற்றை வதைத்தாலும்,
அந்த வீட்டை விற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பீபியின் மனதில் ஒருபோதும் பிறக்கவில்லை…
மலரின் மௌனம் தொடரும் ...

கருத்துகள்
கருத்துரையிடுக