மலரின் மௌனம் ,(பாகம் 7)
அதே ஊரில் சமீனா என்றொரு பெண்ணும் வாழ்ந்து வந்தாள். அவளை ஒருமுறை பார்த்தவர்கள் மீண்டும் திரும்பிப் பார்க்காமல் செல்ல முடியாது. அவ்வளவு பேரழகு. அச்சொட்ட தேவதை பூமியில் இறங்கி வந்தால் எப்படி இருப்பாளோ, அப்படித்தான் சமீனா. அவளின் அழகிற்கு என்ன காரணம் என்று பலரும் வியப்பார்கள். ஒருவேளை அவளது தந்தையின் பரம்பரையோ? ஆம்... அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீனாவின் தந்தை இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, மலையகத் தேயிலைத் தோட்டங்களில் மாசியும், தேங்காயும் உண்டென கள்ளத் தோணியில் இலங்கை வந்தவர்களில் அவரும் ஒருவர். அதனால், அந்த ஊரில் அனைவரும் அவரை "மலையாளத்தான்" என்றே அழைத்தனர். ஆனால், அவரது நல்ல குணமும் நேர்மையும் உழைப்பும் அந்தப் பெயரைக் கூட மரியாதைக்குரியதாக மாற்றியிருந்தது. அதே ஊரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, எளிமையானாலும் கண்ணியமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் அழகே பரம்பரைச் சொத்தாக இருந்தது. அந்த அன்புத் தம்பதியருக்கு ஆறு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். அந்த எட்டு குழந்தைகளில் ஐந்தாவது ...