மலரின் மௌனம் ,(பாகம் 7)

 

அதே ஊரில் சமீனா என்றொரு பெண்ணும் வாழ்ந்து வந்தாள். அவளை ஒருமுறை பார்த்தவர்கள் மீண்டும் திரும்பிப் பார்க்காமல் செல்ல முடியாது. அவ்வளவு பேரழகு. அச்சொட்ட தேவதை பூமியில் இறங்கி வந்தால் எப்படி இருப்பாளோ, அப்படித்தான் சமீனா.

அவளின் அழகிற்கு என்ன காரணம் என்று பலரும் வியப்பார்கள். ஒருவேளை அவளது தந்தையின் பரம்பரையோ? ஆம்... அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமீனாவின் தந்தை இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, மலையகத் தேயிலைத் தோட்டங்களில் மாசியும், தேங்காயும் உண்டென கள்ளத் தோணியில் இலங்கை வந்தவர்களில் அவரும் ஒருவர். அதனால், அந்த ஊரில் அனைவரும் அவரை "மலையாளத்தான்" என்றே அழைத்தனர். ஆனால், அவரது நல்ல குணமும் நேர்மையும் உழைப்பும் அந்தப் பெயரைக் கூட மரியாதைக்குரியதாக மாற்றியிருந்தது.

அதே ஊரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, எளிமையானாலும் கண்ணியமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் அழகே பரம்பரைச் சொத்தாக இருந்தது. அந்த அன்புத் தம்பதியருக்கு ஆறு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். அந்த எட்டு குழந்தைகளில் ஐந்தாவது பிள்ளைதான் சமீனா. அவளுக்கு முன் நான்கு அக்காக்களும், அவளுக்குப் பின் இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தனர்.

அந்தக் காலத்தில் அந்த ஊரில் வறுமை பல குடும்பங்களின் வாசலைத் தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், சமீனாவின் குடும்பம் மட்டும் உழைப்பையும் ஒற்றுமையையும் நம்பி சற்று வசதியாகவே வாழ்ந்தது.

எள்ளு உருண்டை, புளூட்டோ போன்ற இனிப்புப் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்வதே அவர்களது குடும்பத் தொழில். அந்தத் தொழிலே அவர்களுக்கு நல்ல வருமானத்தையும், ஊராரின் மரியாதையையும் பெற்றுத் தந்தது.

சமீனாவின் வாப்பா ஒரு சிறந்த தையல் கலைஞரும் ஆவார். பெருநாள் வந்தாலே, தனது ஆறு மகள்களுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பில், வானவில்லை நினைவூட்டும் பல வண்ணங்களில் அழகிய ஆடைகளை தன் கைகளால் தைத்துக் கொடுப்பார். அந்த ஆறு சகோதரிகளும் ஒரே வரிசையில் அந்த ஆடைகளை அணிந்து நடந்து வந்தால், அவர்கள் அரச மாளிகையிலிருந்து வந்த இளவரசிகளைப் போலவே காட்சியளிப்பார்கள்.

அவர்களது அழகைப் பார்ப்பதற்காகவே சிலர் எள்ளு உருண்டை வாங்கும் பெயரில் அந்தக் கடைக்கு வந்து செல்வார்கள். ஆனால், அந்த அழகின் பின்னால் மறைந்திருந்த வாழ்க்கைப் பயணம் எவ்வளவு பெரிய சோதனைகளை தன்னுள் சுமந்திருந்தது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை...

மலரின் மௌனம் தொடரும்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்