நீ எங்கே ?
நீ எங்கே?
தந்தையே...!
நான்கு வயதில்
என்னை விட்டுவிட்டு
சென்றாய்...
நானறியா இடம்
தேடி...
உன்
விரல் பிடித்து
வீதியோரம் நடந்து சென்ற
பொழுதுகள் எனக்கில்லை...,
உன்
முதுகில் ஏறி
உப்பு மூட்டைச்சென்ற
பொழுதுகளும் எனக்கில்லை...,
உன்
மார்பில் ஏறி
விளையாடி கண்ணுறங்கியப்
பொழுதுகளும் எனக்கில்லை...,
நண்பர்களிடம்
என் தந்தை என
உன்னை அறிமுகப்படுத்திய
அழகிய
பொழுதுகளும் எனக்கில்லை...,
நீ எங்கே...?
தந்தையே..!
என் கலியாணம்
காணவும்
நீ இல்லை...,
என் கணவனை
கட்டித்தழுவி
என் கரம்
பிடித்துக்கொடுக்கவும்
நீ இல்லை...,
என் தந்தையே!!
எப்போதேனும்
நீ வருவாய்
என்ற ஓர்
இனம் தெறியா
மனம் அறியா
ஏக்கம் என்னுள்...
உனக்கான
வெற்றிடம் என்னுள்...
ஒரு பெருமூச்சுடன்...
பணக்கடனை
எப்படியாவது எப்போதாவது
அடைத்து விடலாம்,
வளர்த்த கடனை
எப்படி அடைப்பது..?
எவ்வளவு அடைப்பது..?
சொல் தந்தையே
நீ தானே
என்னை இவ்வுலகில்
விட்டுவிட்டு சென்றது...,
எவ்வளவு தான்
செய்தாலும்
எதைப்பார்த்து பார்த்துச்
செய்தாலும்
நன்றிகெட்டவளே
என
எனக்கு பல
பட்டங்கள் சூடும்
போது...
என்
கவலை கண்ணீரில்
இதய வலியின்
வெப்பத்தை
கக்குகிறது...
மூச்சுக்காற்று கூட
கவலையில் கல்லாகின்றன...
இப்போது சொல்
நீ எங்கே
தந்தையே...
நீ இறைவனிடம்
சென்றிருந்தால்
உன் புதையிடம்
நான் காண வேண்டும்,
நீ உயிருடன் இருந்தால்
உலகின் உன் இருப்பிடம்
நான் அறிய வேண்டும்
நீ எங்கே...?
என் தந்தையே...!

கருத்துகள்
கருத்துரையிடுக