இலங்கையர் நாம் மீண்டெழுவோம்.


இந்து சமுத்திர முத்தே

இலங்கை எங்கள் சொத்தே//

சிறு தீவை இங்கு

சிதறடித்த பெருங்காற்றே நீ //

தாண்டவம் ஆட

மாண்டனர் சிலர் 

மீண்டனர் பலர்//

தொடர் மழை பொழிய

இடர் எம்மை சூழ//

தொடர் மலைகள் சரிய

தொடர்ந்து உயிர்கள் மண்ணில் மறைய//

உறவுகள் அதிர்ச்சியில் உறைய

சேதமான  உடைமைகள் 

தேசத்தின் கோலம் ஆயின//

வான் கதவுகள் திறந்தன

வானுலகம் பறந்தன 

உயிர்கள் பல//

மலைசரிவால் மண்ணுக்குள்

மாண்டனர்//

வெள்ளத்தால் உள்ளுக்குள்

மூழ்கினர்//

இறுக்கிப் பிடித்த பென்சிலுடன்

இறந்த சிறுவனும்//

கணவன் வருகைக்காய் இன்னும்

கண்ணீருடன் காத்திருக்கும் பெண்ணும்//

மண்ணுக்குள் மர்மமாய்

மறைந்த கிராமமும் //

என இதயத்தை உடைக்கும்

எத்தனை கண்ணீர் கதைகள்//

பணக்காரன் ,ஏழை 

பகிர்ந்துண்டனர் ஓர் தட்டில்//

உயிர் காத்து

உடைமைகள் விட்டு ஓட

உறவுகளின் உன்னதத்தை

உணர்த்தியது டிட்வா//

நிலையில்லா உலகில்

நீயும் நானும் ஒன்றென

உணர்த்தியது டிட்வா//

சொத்துகள் செத்துப்போகும்

புண்ணியங்கள் தொடர்ந்து வரும்

உணர்த்தியது டிட்வா//

கற்றது பாடம்

பெற்றது படிப்பினை என நகர்வோம்//

உடைந்தது போதும்

தடையென கவலையை 

தகர்த்தெறிவோம்//

இழந்தவை என்றும்

இருந்திடும் நினைவாய் என

மனதினில் கொண்டு எழுந்திடுவோம்//

மறைந்தவர் நினைவுகளை

மலர்இதழ் தூவி 

மனதினில் நிறுத்திடுவோம்//

அவர்களின் ஆசிர்வாதங்கள்

அகிலத்தில் என்றும் 

உண்டென தினம் மீண்டெழ

உழைத்திடுவோம்//

உள்ளத்தால்,உணர்வால்

உடைந்த இலங்கையை

உயிர்ப்பித்திட, 

ஒற்றுமையாய் ஒன்றிணைந்து

ஒரு மனதுடன் 

உழைத்திடுவோம்//


   பஸ்மினா அப்பாஸ்

  அப்புத்தளை









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்